Wednesday, 5 August 2015

முன்னுரை
            இலக்கியம் என்பது காலத்தைக் காட்டும் கண்ணாடியாகும்.  அந்தக் கண்ணாடியின் வழி, அவ்விலக்கியம் எழுதப்பட்ட காலத்தின் நிகழ்ச்சிகளைக் காணலாம்.  இலக்கியம் படைக்கும் கவிஞன் தன்னைச் சூழ்ந்த சமுதாயத்தினைக்  கண்டு, அச்சமுதாயம் எவ்வாறு இருக்க வேண்டும் என்ற தன்னுடைய எண்ணத்தைப் புகுத்திச் சீர்மை பெற்ற சமுதாயமாக விளங்க வேண்டும் என முயல்வான்.
           
இளங்கோவடிகள், நாட்டை ஆட்சி செய்யும் குடும்ப உறுப்பினராக இருந்தாலும், உண்மைக் கவிஞனாக இருந்ததால் நாட்டின் நிலையை மிகத் தெளிவாக அறிந்திருந்தார்.  தன்னுடைய வாழ்க்கையில் எத்தகைய உயர்ந்த நோக்கினைக்  கைக்கொண்டிருந்தாரோ அதேபோல் சமுதாயமும் உயர்ந்த கொள்கைகளைக் கடைபிடிக்க வேண்டும் என நினைத்தார்.  அதனால்தான் தன்னுடைய காப்பியத்தில் மக்களுக்கு நலம் பயக்கும் நெறிகள் பலவற்றை எடுத்துரைத்தார்.  முத்தமிழைத் துணையாகக் கொண்டு , முந்நாட்டை வலம் வந்து, மூவரசர் நலன் கண்டு முக்காலத்தும் உணரும் வகையில் சிலப்பதிகாரத்தைப்  படைத்தார்.  அதனால்தான் அவர் வாழ்ந்த காலத்தின் சமுதாயத்தைப் பிரதிபலிக்கும் ஆடியாக சிலப்பதிகாரக் காப்பியம் திகழ்கிறது.
           
சேர, சோழ, பாண்டிய நாடுகளெனத் தனித்தனியாக இருந்து  மக்களின் மனப்பான்மையும் வேறுபட்டிருந்த அக்காலத்தில் மூன்று தனிநாடுகளையும் தமிழ் வழங்கும் ஒரு நாடாகக் கொண்டு போற்றிப் புகழ்ந்தார்.  அவற்றை ஆண்ட மூவேந்தர்களையும் ஒருங்கே மதித்துப் போற்றும் நெஞ்சம் கொண்டிருந்தததால் புகார், மதுரை, வஞ்சி ஆகிய மூன்று நாடுகளின் தலைநகர்களையும் தம் காப்பியத்தில் மூன்று பகுதிகளின் தலைப்புகளாக்கினார். மூன்று நாடுகளில் பாயும் ஆறுகளையும்  வருணித்துப் பாடினார்.
           
தமிழகம் ஆட்சியால் மூன்றாகப் பிரிவுற்றிருந்த போதிலும் பண்பாட்டால், மொழி வகையால் தமிழர் என்று ஓர் இனம் வாழும் நாடே என்ற கொள்கையை வலியுறுத்திக் காப்பியத்தைப் படைத்தார்.  ஒரு வேந்தன் மற்றொரு வேந்தனை
  • 1
வெறுக்காத வகையில் பல நிகழ்ச்சிகளை அமைத்துத் தமிழகத்தின் ஒற்றுமைக்குக் கால்கோள் இட்டவர் இளங்கோவடிகள்.  அவர்தம் காப்பியத்தில் அக்கால மக்களின் வாழ்க்கை முறை, தொழில்கள், கலைகள், வாணிகம், பழக்க வழக்கங்கள், சமயம், திருமணம், பெண்கள் நிலை, நகர அமைப்பு, அரசியல், போர்முறை போன்றவற்றால் தமிழர் தம் சிறப்பினை அறியலாம்.
புகார் நகரம்
            தமிழர் தாம் வாழும் நகரங்களை எவ்வாறு அமைத்திருந்தனர் என்பதைச் சிலம்பு மிகத் தெளிவாகக் காட்டுகிறது.  புகார் நகரம் உள் அமைப்பு, வெளி அமைப்பு என இருவகையாகப் பிரித்து நிர்மானிக்கப் பட்டிருந்தது.  நகர அமைப்பில் தமிழர்தம் கலையுணர்ச்சியையும், தொழில்நுட்பத்தையும் காணுந்தோறும் வியப்பே மேலிடுகிறது.  புகார் நகரின் உள் அமைப்பைப்  பட்டினப்பாக்கம் எனவும், வெளி அமைப்பை மருவூர்ப்பாக்கம் எனவும் பெயரிட்டு அமைத்தனர்.
பட்டினப்பாக்கம்
       அகநகராகிய பட்டினப்பாக்கம் பெரிதான இராசவீதியும், பெரிய தேர்கள் செல்கின்ற தேர்வீதியும், கடைத்தெருவும், பெருங்குடி வாணிகரின் மாடமாளிகைகள் விளங்குகின்ற தெருவும், மறையோர்கள் இடங்களும், உழவர்கள், மருத்துவர்கள், காலக்கணிதர்கள் ஆகியோர் பகுதி பகுதியாக வாழும் இடங்களும்,  திருமணிகளைக் குற்றுவோர், அழகாக வளைகளை அறுத்து இயற்றுவோர் வாழும் அகன்ற பெருவீதிகளும், சூதர், மாகதர், வேதாளிகர், நாழிகைக் கணக்கர், கூத்தர், கணிகையர், கூத்தியர், ஏவற்றொழில் செய்வோர், வீட்டு வேலை செய்யும் பெண்கள் ஆகியோர் வாழும் இடங்களும், தமக்குரிய தொழில் பயின்ற குயிலுவக் கருவியாளர், பன்முறையான வாத்தியம் வாசிப்பவர், விதூசகர் ஆகியோர் தனித்தனியே வசிக்கின்ற இடங்களும், குதிரை, யானை, தேர் ஆகியவற்றை இயக்குபவர், தறுகண்மையுடைய மறவர் ஆகியோர் வதியும் இடங்களும்  அமைந்து பாதுகாப்பான கோட்டை சூழ்ந்து பட்டினப்பாக்கம் அமைந்திருந்தது.

No comments:

Post a Comment